ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் , கூட்டணியின் பெயரையும், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவின் பெயரையும் மறந்ததோடு, கோர்வையாக தமிழில் பேச தடுமாறியதால் அருகில் இருந்தவர்கள் குழப்பம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஊர்வசி செல்வராஜின் மகன் ஊர்வசி அமிர்தராஜிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் காங்கிரஸ் எம்.பி தனுஷ்கோடி ஆதித்தன், திமுக மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்து திரும்பிய ஊர்வசி அமிர்தராஜ் செய்தியாளர்களை கண்டதும் தயக்கத்துடனே பேச்சை ஆரம்பித்தார்.
ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்பதற்கு பதிலாக ஜனநாயகத்தை விட்டு விட்டு தனது பேச்சை தொடங்கினார்.
முன்னாள் எம்.பி என்பதற்கு, எம்.பி தனுஷ்கோடி ஆதித்தன் என்று குறிப்பிட்ட ஊர்வசி அமிர்தராஜ், ஒரு கட்டத்தில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவின் பெயரை மறந்து திராவிட கூட்டணி என்றதோடு, அவர் அருகில் நின்ற திமுக மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணனின் கட்சி பொறுப்பையும் கூற இயலாமல் திணறினார்.
அந்த தொகுதிக்கு செய்ய போகின்ற பணிகளாக அவர் சொன்ன அனைத்தும் இதே ரகமான தயக்கத்துடனான உச்சரிப்புதான். கல்வி உதவித்தொகை என்பதை கூட சரியாக உச்சரிக்க இயலாமல் திணறிய அவர், வெற்றி பெற்றால் 20 பேருக்கு இலவச கல்வி வழங்குவேன் என்றார்.
சிறுவயது முதலே சென்னையில் வளர்ந்த ஊர்வசி அமிர்தராஜ், ஆங்கில வழி கல்வி பயின்றவர் என்பதால் தமிழை கோர்வையாக பேசுவதில் சற்று சிரமப்பட்டதாகவும் மற்றபடி தொகுதி மக்களுக்கு அவர்தான் செல்லப்பிள்ளை என்றும் காங்கிரசார் சமாளித்தனர்.