தமிழகத்தில் தேசிய கட்சியான காங்கிரசில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக கோஷ்டி மோதல் எழுந்துள்ளது. போட்டி போட்டிக் கொண்டு காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டத்தில் குதித்ததின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
காங்கிரஸ் கட்சிக்கு உட்கட்சி பூசல் என்பது புதிதல்ல. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதற்கு முன்னரே, கோஷ்டி மோதல் உருவாகியுள்ளது.
கட்சியில் இருக்கும் சில முக்கிய புள்ளிகளின் வாரிசுகளுக்கு சீட் கொடுக்கவும், பணபலம் நிறைந்தவர்களுக்கு மட்டுமே சீட் கொடுக்கவும் முடிவெடுத்துள்ளதாக கூறி ஆரணி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத் தனது ஆதரவாளர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனை அறிந்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆதவராளர்கள் வேட்பாளர்கள் தேர்வு முறையாக நடப்பதாகவும், தேவையின்றி களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் போட்டிக்கு போட்டியாக போராட்டத்தில் குதித்தனர்.
இதனிடையே விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் விஜய தரணியை வேட்பாளராக களமிறக்க கூடாது எனக் கூறி சிலர் தர்ணாவில் ஈடுபட்டனர். மூன்று தரப்பினரும் போட்டி போட்டு நடத்திய போராட்டத்தால் சத்தியமூர்த்தி பவன் போராட்ட பூமியானது.
இதனிடையே, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியும் தன் பங்குக்கு தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், நிறைய தவறு நடப்பதாகவும் கருத்தை பதிவு செய்துள்ளார்.
தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள், நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை எனவும் எம்.பி. ஜோதிமணி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் சிறிய கட்சிகள் கூட சட்டமன்ற தேர்தலுக்கு படுவேகத்தில் தயாராகி வரும் நிலையில், தேசிய கட்சியான காங்கிரசில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக எழுந்துள்ள இந்த கோஷ்டி மோதல் தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.