தமிழகச் சட்டமன்றத் தேர்தல், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் ஆறாம் நாள் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதே நாளில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
மார்ச் 19ஆம் தேதி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்பு மனு தாக்கல் கிடையாது.
பெறப்பட்ட வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை மார்ச் 20 அன்று நடைபெறும். போட்டியில் இருந்து விலக வேட்பு மனுக்களை விலக்கிக் கொள்வதற்கான கடைசி நாள் மார்ச் 22ஆம் தேதி ஆகும்.
அன்று மாலையே ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும்.
தமிழகத்தில் அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் ஏப்ரல் ஆறாம் நாள் வாக்குப்பதிவு நடைபெறும்.
பதிவாகும் வாக்குகள் மே இரண்டாம் நாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.