தமிழக சட்டசபை தேர்தலில் தபால் வாக்குகள் பதிவு செய்யும் நடைமுறைகளை உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி வரும் நிலையில், மாவட்ட செயலாளர்களுடனான கூட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டினார். காணொலி மூலமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய அவர்,தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்று பெயரிடப்பட்டுள்ள பொதுக்கூட்டம் திருச்சியில் 7 ஆம் தேதி அன்று காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரையில் நடைபெறும் என்றார்.
கூட்டத்தில் திமுகவினர் அனைவரும் பங்கேற்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார். 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கான தபால் வாக்கு பதிவு செய்யும் நடைமுறைகளை உன்னிப்பாகக் கவனித்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் அறிவுறுத்தினார்.
திமுக வேட்பாளர் பட்டியல் 10 ஆம் தேதி வெளியாகுமென அவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் 11 ஆம் தேதி அன்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.