அதிமுகவில் விருப்ப மனு தாக்கல் செய்த அனைவருக்கும் ஒரே நாளில் நேர் காணல் நடத்தப்பட்டுள்ளது. அனைவரும் ஒன்று பட்டு தேர்தலை சந்திக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த அதிமுகவில் 8250 மனுக்கள் கொடுக்கப்பட்டிருந்தன. மனு கொடுத்த அனைவரையும் ஒரே நாளில் அழைத்து நேர்காணல் நடத்தி வேட்பாளரை தேர்வு செய்ய அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட 9 பேர் கொண்ட ஆட்சி மன்ற குழு நேர்காணலை நடத்தியது. இதில் ஒரு தொகுதியிக்கு விருப்ப மனுக் கொடுத்த அனைவரையும் ஒரே நேரத்தில் வரவழைத்து அவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. இதன் மூலம் ஒரேநாளில் அனைத்து தொகுதிகளுக்கும் நேர்காணலை நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நேர் காணலின் போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நெருங்கி வருவதாலும் திடீரென தேர்தல் அறிவித்துவிட்டதாலும் அனைவருக்கும் ஒரே நாளில் நேர்காணல் நடத்த வேண்டிய சூழல் உள்ளது என்றார்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 15 க்கும் அதிகமானோர் விருப்ப மனு வழங்கியுள்ளனர் என்ற அவர், ஆனால் ஒருவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்றார். அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலில் பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பின்னர் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களுக்கு எந்த வித சேதாரமும், குறைவுமில்லாமல் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார் என்றார்.
வெற்றி பெறுவது மட்டுமே நம் இலக்கு என்ற அவர் அதனை நோக்கி செல்ல வேண்டும் என்றார். விருப்ப மனு தாக்கல் செய்த அனைவரும் பணம் கட்டியதற்காக அசல் ரசீதை கொண்டு வர வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது. அதிமுக வரலாற்றில் முதல் முறையாக விருப்ப மனு கொடுத்த அனைவருக்கும் ஒரே நாளில் நேர் காணல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.