புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி விடுவிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கடந்த 4ஆண்டுகளுக்கு முன்பு கிரண்பேடி நியமிக்கப்பட்டார். தொடக்கம் முதலே புதுச்சேரி அரசுக்கும், கிரண்பேடிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் அவரை மாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
கடந்த வாரம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த அவர், கிரண் பேடியை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி விடுவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. புதிய துணைநிலை ஆளுநர் நியமிக்கப்படும் வரை, தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரியையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, புதுச்சேரியில் 4 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகி உள்ளதால் ஆட்சிக்கு சிக்கல் வலுத்து வருகிறது. 30 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், காங்கிரசுக்கு 14 உறுப்பினர்கள், 3 தி.மு.க.வினர், சுயேட்சை ஒருவர் ஆதரவு என கூட்டணியின் பலம் 18 ஆக இருந்தது.
நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடிகிருஷ்ணாராவ் ,ஜான்குமார் என காங்கிரசில் 4 பேர் ராஜினாமா செய்துள்ளதால் அக்கட்சியின் பலம் 10 ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மையை இழந்துவிட்டதால் முதலமைச்சர் நாராயணசாமி அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி வலியுறுத்தி உள்ளார்.
இதற்கு பதிலளித்த நாராயணசாமி, காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதாகத் தெரிவித்தார்.