புதுச்சேரியில் எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் அடுத்தடுத்து பதவி விலகி உள்ளதால் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மையை ஆளும் காங்கிரஸ் இழந்துள்ளது. ஆனாலும் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. மொத்தமுள்ள 30 எம்.எல்.ஏக்களில் காங்கிரசுக்கு 14 பேரும், திமுகவுக்கு 3 பேரும் அரசுக்கு ஆதரவு தரும் சுயேச்சை ஒருவர் என 18 பேர் இருந்தனர்.
எதிர்கட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் 7, அ.தி.மு.க. 4 என 11 பேர் உள்ளனர். நியமன பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும் சேர்த்தால் எதிர்கட்சியில் 14 பேர் உள்ளனர். இந்நிலையில் பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு பதவி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து, நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடிகிருஷ்ணாராவ் ,ஜான்குமார் என காங்கிரசில் 4 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 10 ஆக குறைந்துள்ளது. அந்த கூட்டணிக்கு இப்போது 14 எம்.எல்.ஏக்களும், எதிர்க்கட்சியில் 14 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். இதனால் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மையை இழந்துள்ளதால் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி வலியுறுத்தி உள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை இருக்கிறது என்றார். இந்திய அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட இருப்பதாக தெரிவித்தார்.
அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் ராஜினாமா, செய்துள்ளதால் புதுச்சேரியில் அரசு நிலைக்குமா என்ற கேள்வி உருவாகி உள்ளது.