அதிமுகவை சிலர் திட்டமிட்டு சதி செய்து கைப்பற்ற முயற்சிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் மகளிர் அமைப்பினருடனான கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மக்கள் தான் முதலமைச்சர், மக்கள் சொல்வதை செய்யும் வேலைக்காரனாக தான் இருப்பதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வாணியம்பாடியில் அதிமுக இளைஞர் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவினருடனான கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், சமூக வலைதளங்களில் தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பரப்பும் பொய் பிரச்சாரத்தை தகவல் தொமில் நுட்ப பிரிவு முறியடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
திருப்பத்தூரில் திரண்டிருந்த மக்களுக்கு மத்தியில் அதிமுகவுக்கு ஆதரவாக முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் குறை தீர்க்கும் திட்டம் இன்னும் பத்து நாளில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
பின்னர் கிருஷ்ணகிரியில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர், அதிமுகவை சிலர் வேண்டுமென்ற திட்டமிட்டு சதி செய்து கைப்பற்ற முயற்சிப்பதாக தெரிவித்தார். டிடிவி தினகரன் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது என்றும், ஒரு குடும்பம் ஆள்வதற்கு ஒரு போதும் அதிமுக தலை வணங்காது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.