வன்னியர் சமுதாயத்தினருக்கு 20 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு தொடர்பாகவும், தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், அமைச்சர்கள் குழுவினருடன், பாமக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பசுமைவழிச் சாலையில், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி இல்லத்தில் இந்த பரஸ்பர பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.
இதில், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட குழுவினரும், பாமக தரப்பில், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
இதில், வன்னிய சமுதாயத்தினருக்கு, கல்வி, வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைத் தொடர்பாகவும், சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.