தாம் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறை சொல்கிறார் என்றும் அண்ணா மறைவுக்குப் பிறகு கருணாநிதி எப்படி முதலமைச்சர் ஆனாரோ அப்படியே தாமும் முதலமைச்சர் ஆனேன் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்ரீபெரும்புதூரில் திறந்த வாகனத்தில் நின்றவாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவிலுக்கு சென்ற முதலமைச்சருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
அங்கு சாமி தரிசனம் மேற்கொண்ட முதலமைச்சர், பேருந்து நிலையம் அருகே மக்களிடையே உரையாற்றினார். தாம் ஊர்ந்து வந்து முதலமைச்சர் ஆனேன் என ஸ்டாலின் கிண்டல் செய்கிறார் என்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எப்படி சென்னை வந்தார், எப்படி முதலமைச்சர் ஆனார் என்று மக்களுக்குத் தெரியும் என்றும் கூறினார்.
தாம் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என ஸ்டாலின் குறை சொல்கிறார் என்றும் அண்ணா மறைவுக்குப் பிறகு கருணாநிதி எப்படி சூழ்ச்சி செய்து முதலமைச்சர் ஆனார் என்பதை மக்கள் அறிவார்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
வரும் 27ஆம் தேதிக்குப் பிறகு இந்த ஆட்சி இருக்காது என்று ஸ்டாலின் கூறி வருகிறார் என்றும், ஆனால் அன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறக்கவிருப்பதாகவும் அன்றிலிருந்து தங்களுக்கு நல்ல நேரமே என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் ஸ்டாலினுக்கு மறுபடியும் அதிமுக அரசு கவிழும் கனவு வர ஆரம்பித்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரைத் தொடர்ந்து வாலாஜா மற்றும் தேரடி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு பள்ளிவாசலில் இருந்து வந்த பாங்கு ஒலியை கேட்டு தனது பேச்சை சற்று நேரம் நிறுத்தினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நல்லது நினைத்தால் ஸ்டாலின் எதிர்கட்சி வரிசையிலாவது அமரலாம் என்றும் இல்லையென்றால் அதைக்கூட மக்கள் தர மாட்டார்கள் என்றார்.