மு.க.ஸ்டாலின் 300 தொகுதிகளைக் கூட இலக்காக வைக்கலாம், ஆனால் வாக்களிக்க வேண்டியது மக்கள்தான் என முதலமைச்சர் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சிக் காலத்தில்தான் அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டதாக பட்டியலிட்ட எடப்பாடி பழனிசாமி, இ-டெண்டர் முறையில் தற்போது முறைகேட்டுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சரவை மீது ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் ஊழல் புகார் கூறியுள்ளது பற்றி பதிலளித்தார்.
ரங்கராஜன் கமிட்டி பரிந்துரை அடிப்படையில் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் அறிவித்ததாகவும், அதற்கு கிடைத்த வரவேற்பைப் பொறுக்காமல் மு.க.ஸ்டாலின் பொய்யான குற்றாச்சாட்டை சுமத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு ஊழல் பட்டியலையும் அவர் வாசித்தார்.
திமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலை டெண்டர்களில் முறைகேடு, புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் ஊழல் நடைபெற்றதாகவும், ஆனால் தற்போது இ-டெண்டர் முறையில் முறைகேட்டுக்கு வாய்ப்பே இல்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் உள்ளவர்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லை என்றும், தங்கள் கூட்டணியில் இருப்பவர்கள் சுயமாக சுதந்திரமாக பேச கூடியவர்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.