மக்கள் நீதிமய்யம் கட்சி, தமிழகத்தில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்க கோரி, தேர்தல் ஆணையத்திடம் போராடி வரும் நிலையில், டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டதால் அடையாளம் காணப்பட்ட எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி, தங்கள் செல்வாக்கால் புதுச்சேரியில் கமல்ஹாசன் வென்றுவிட வாய்ப்பு உள்ளதால் தங்களுக்கு டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 15 லட்சம் வாக்குகளை பெற்ற மக்கள் நீதிமையத்தின் சின்னம் டார்ச் லைட்..!
இந்த முறை சட்டமன்ற தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு தமிழகத்தில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படவில்லை. ஆனால் புதுச்சேரியில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது.
தனது கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் கிடைக்க விடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டிய கமல்ஹாசன், தமிழகத்திலும் தங்களுக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் டார்ச் லைட் சின்னம் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி என்ற இயக்கத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி தலைவர் விஸ்வநாதன் என்பவர் தமிழகத்தில் தங்கள் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள டார்ச் லைட் சின்னம், புதுச்சேரியில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், எம்.ஜி.ஆரின் புகழ் டார்ச் லைட் மீது பட்டு புதுச்சேரியில் அவர்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளதால் தங்களுக்கு டார்ச் லைட் வேண்டாம் என வினோத காரணம் கூறி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என்று சொன்னதை கூட ஏத்துக்கலாம், ஆனால் டார்ச் லைட் சின்னத்தாலதான் இப்படி ஒரு கட்சி இருப்பதே மக்களால் அறியப்பட்ட நிலையில், தங்களால் மக்கள் நீதி மையம் வெற்றி பெற்று விடும் என்று சிவப்பு தொப்பி விஸ்வநாதன் வெளியிட்ட அறிக்கை குறும்புகளின் உச்சம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
அதே போல ரஜினி துவங்க உள்ளதாக கூறப்பட்ட மக்கள் சேவை கட்சி என்ற பெயர் தனது இயக்கத்துக்கு சொந்தமானது என அரியலூரை சேர்ந்த தங்க சண்முக சுந்தரம் என்பவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இது தொடர்பாக புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
கட்சி பெயருக்கும் ,சின்னத்தை பெறுவதிலும் காட்டும் ஆர்வத்தை அரசியல் கட்சிகள் மக்களுக்கு செய்யும் சேவையிலும் காட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.