தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்குத் தமிழக அரசுப் பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதாவிற்கு, 8 மாதங்களாகத் தமிழக ஆளுநரின் ஒப்புதல் பெறாதது ஏன்? என தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவிற்கு ஏறக்குறைய 8 மாதங்களாக, தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகுந்த வேதனைக்குரியது என கூறியுள்ள அவர், அந்த சட்டத் திருத்தத்திற்கு முதலமைச்சரே நேரில் சென்று ஆளுநரை வலியுறுத்தி ஒப்புதலை எவ்விதத் தாமதமும் இன்றிப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் மாபெரும் போராட்டத்தை திமுக நடத்திடும் சூழ்நிலையை உருவாக்க வேண்டாமென தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.