பீகார் என்றாலே, நாட்டில் உள்ள அனைவரது நினைவிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் வந்திடுவர். பன்முகத் தன்மை கொண்ட பீகார் மாநிலத்தில், ஆட்சியைப் பிடிக்க நிலவும் போட்டி குறித்து விவரிக்கும் செய்தித்தொகுப்பு.
ஒருகாலத்தில் காங்கிரஸ் கொடிகட்டிப்பறந்த பீகார் மாநிலத்தில், கடந்த சில பத்தாண்டுகளாக, மாநில கட்சிகளே கோலோச்சுகின்றன. நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும், லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான, ராஷ்டிரிய ஜனதா தளமும், முன்னணியில் இருக்கின்றன.
இங்கு, மூன்றாம் இடத்தை பிடிப்பதில், பாரதிய ஜனதா கட்சிக்கும், காங்கிரசுக்கும் எப்போதும், பலத்த போட்டி நிலவும். நிதிஷ் அல்லது லாலு கட்சியில் ஏதாவது ஒன்றில் கூட்டு வைத்துக் கொண்டு, காங்கிரசும், பாஜகவும், தேர்தலை எதிர்கொள்ளும். இங்கு நடைபெறும், சிறிய தொகுதி இடைத்தேர்தல் என்றால் கூட, இந்த இரண்டு தேசிய கட்சிகளும், வரிந்து கட்டும்.
காரணம், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்று, மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கான, பின்புலமாக இருக்கும், எம்.பி தொகுதிகளை அதிகளவில் தன்னகத்தே கொண்டிருப்பது தான். அந்த மாநிலத்தில் மொத்தம் 40 எம்.பி தொகுதிகள் உள்ளன.
தேர்தல் கூட்டணியில் நிதிஷ்குமாரின், ஐக்கிய ஜனதா தளம் - பாஜக இடம்பெற்றாலும், இருகட்சிகளிடையே, பரஸ்பர உறவு, பெரும்பாலும், தாமரை இலைத் தண்ணீராகவே தொடர்வதாகவும், அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்..
லாலு மகன் தேஜஸ்வி யாதவின் பரப்புரை கூட்டங்களுக்கு, கொரோனா பாதிப்பை எல்லாம் கண்டு கொள்ளாது, கூடிய கூட்டம், அனைத்து தேசிய கட்சிகளையும் உற்று நோக்க வைத்திருக்கிறது.
தேஜஸ்வி யாதவின், போஸ்டர் பிரச்சாரம், பொதுமக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
ஆர்.ஜே.டி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மெகா கூட்டணி, தங்கள் ஆட்சி அமைந்தால், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருக்கிறது.
தேஜஸ்வி யாதவ் அரசியலில், உறுதியாக வலம் வர, அவரது தாய் மாமன்களான, சுபாஷ் பிரசாத் யாதவ் மற்றும், சாது யாதவ் என்றழைக்கப்படும் அனிரூத் பிரசாத்துமே, மிக முக்கிய காரணம் என்கின்றனர், பீகார் அரசியலை உன்னிப்பாக கவனிப்பவர்கள்.
மோடிக்கும் எனக்கும் நேரடி போட்டி என லாலுவின் மகன் தேஜஸ்வி வம்புக்கு இழுப்பதும், மோடி எனது தந்தையின் ஆத்மார்த்த நண்பர் என, சிராக் பாஸ்வான், பிரதமரை, தனது தனித்த கூட்டணிக்கு துணைக்கு அழைப்பதும் என, இரண்டு இளம் தலைவர்களின் முழக்கங்களும், பீகார் சட்டமன்ற தேர்தல் அரசியலை, திக்குமுக்காட வைத்துவிட்டதே கள எதார்த்தம்.