புதிய வேளாண் சட்டங்களால் ஏற்பட்டுள்ள விலையேற்றத்தைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், புதிய வேளாண் சட்டங்களின் விளைவாக விழாக்காலத்தில் இன்றியமையாப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இன்றியமையாப் பொருட்களை எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்துக் கொள்ளலாம் எனப் பெரு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரத்தால் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் காய்கறிகள் உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்களின் விலையேற்றத்தில் இருந்து மக்களைக் காக்கக் கேரள அரசைப் போல் காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயிக்கும் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.