ஒரு காலத்தில் வீட்டுக்கு கூரை போடக் கூட வசதியில்லாமல் இருந்த தாம் பின்னாளில் அரசியல் கட்சி துவங்கியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
மேலும் தான் ஈழத்திற்கு சென்ற போது தமிழகத்தில் ஈழ உணர்வாளர்கள் யார் யார் என்று பிரபாகரன் தன்னிடம் கேட்டு தெரிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான சாகுல் ஹமீது நினைவேந்தலின் போது, வழக்கம்போல் தனது ஈழப்பயணம் தொடர்பான நினைவுகளையும் சீமான் அசைபோட மறக்கவில்லை.
ஈழம் சென்றபோது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் "யாரெல்லாம் தமிழகத்தில் உணர்வாளர்கள்" என்று தன்னிடம் கேட்டார் என்றும் அதற்கு சாகுல் ஹமீது உள்ளிட்டோரின் பெயர்களை தாம் கூறியதாகவும் சீமான் கூறினார்.
பிரபாகரன் தன்னிடம் ஒரு மணி நேரம் பேசினால் அதில் கால் மணி நேரம் எம்ஜிஆர் பற்றி மட்டும் தான் பேசுவார் என்று கூறிய சீமான், இந்திய ராணுவம் ஈழத்தில் நிலை கொண்டிருந்த சமயத்தில் கூட எம்ஜிஆர் கிட்டுவை அழைத்து 36 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து அனுப்பினார் என்று பிரபாகரன் தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.
இறுதியாக ஒரு காலத்தில் வீட்டுக்கு கூரை போடக் கூட வசதியில்லாமல் தாம் இருந்ததை ஒப்புக்கொண்ட சீமான், பின்னாளில் ஒரு கட்சியையே துவங்கியதைவும் குறிப்பிட்டுள்ளார்.