அதிமுக அறிவித்த முதலமைச்சர் வேட்பாளரை ஏற்காதவர்களுக்கு கூட்டணியில் இடமில்லை என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
பாஜகவில் சில இரண்டாம் நிலை தலைவர்களின் கூட்டணி கருத்துகள், குட்டையைக் குழப்பி ஆதாயம் அடையும் முயற்சி என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக, எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவரை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
பிறகு பேசிய அவரிடம், எடப்பாடி பழனிசாமியையே கூட்டணிக்கான முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பீர்களா என கேட்டபோது, எல்.முருகன் பதில் ஏதும் சொல்லாமல் சென்றுவிட்டார்.
இதேபோல, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக மாறுபட்ட கருத்துகளை கூறிவருகிறார். திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியங்களை மறுக்க முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும், அதிமுக அறிவித்த முதலமைச்சர் வேட்பாளரை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே கூட்டணியில் இடம்பெற முடியும் என்றார்.
அதிமுக தலைமை, தமிழக பாஜக தலைமையைப் பொறுத்தவரை கூட்டணி குறித்து குழப்பம் இல்லை என்றும், பாஜகவில் சில இரண்டாம் நிலை தலைவர்களின் கருத்துகள், தர்மசங்கடத்தை ஏற்படுத்தி ஆதாயம் அடையும் முயற்சி என்றும் அவர் குற்றம்சாட்டினார்.