ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டை அவரது இல்லத்தில் சச்சின் பைலட் சந்தித்துப் பேசினார்.
ராஜஸ்தானில் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேருடன் சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்க முயன்றதாகக் கூறித் துணை முதலமைச்சர் பதவியில் இருந்தும், மாநிலக் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அவர்களைச் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கான அறிவிக்கையும் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரை சச்சின் பைலட் சந்தித்ததையடுத்து சமாதானம் அடைந்தார். இதையடுத்து இன்று ஜெய்ப்பூரில் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் வீட்டில் நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் கலந்துகொண்டார்.
அப்போது கெலாட்டும் சச்சின் பைலட்டும் கைகுலுக்கிக் கொண்டனர். ராஜஸ்தான் சட்டமன்றக் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.