பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என ராஷ்டிரீய ஜனதா தளம், லோக் தாந்திரிக் கட்சி , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
தேர்தல் நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்து கொள்ளலாம் என பாஜக கூறியுள்ள நிலையில், திட்டமிட்டபடி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
தேர்தலின் போது தேவையான கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என செய்தி சேனல் ஒன்றில் பேசுகையில் அவர் கூறினார்.
நடப்பு பீகார் சட்டப்பேரவையின் ஆயுள் வரும் நவம்பர் 29 ஆம் தேதி முடிகிறது. நவம்பர் 28 ஆம் தேதிக்குள் தேர்தல் நடைமுறைகளை முடிக்கவில்லை என்றால் பீகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் நிலைமை ஏற்படும்.