பல ஆண்டுகளாகவே நெய்வேலி அனல் மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததால், கடந்த இரு மாதங்களில் அடுத்தடுத்து இரு விபத்துகள் ஏற்பட்டு 10 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்று நடந்த விபத்துக்கும், உயிரிழப்புக்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், உயிரிழந்த 5 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடும்,. காயமடைந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவியும் வழங்கவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
என்.எல்.சி. வளாகத்தில் உள்ள 30 ஆண்டுகளைக் கடந்த அனைத்து மின்உற்பத்தி அலகுகளையும் தற்காலிகமாக மூடுவதுடன், விபத்துகள் குறித்து உயர்நிலைக் குழு விசாரணைக்கும் ஆணையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.