கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர, அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்திருப்பது, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
மாநிலங்களில் உள்ள 1540 கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மாநிலங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் நிர்வாக அடிப்படையை மாற்றி, பா.ஜ.க. தனது சொந்த அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாகக் கொண்டு வரப்படும் அவசரச் சட்ட முயற்சியை உடனே கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும் விவசாயிகள் கடன் பெறும் வசதிகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாத்திடும் வகையிலும், முதலமைச்சர் மத்திய அரசுக்குக் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து, இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கும் முயற்சியை நிறுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.