ஒரு குடும்பத்தின் அதிகாரப் பேராசையால் நாட்டில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டதாகவும், நாடே சிறைச்சாலை ஆக்கப்பட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாள் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது நாட்டில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டது. இதன் 45 ஆண்டு நிறைவையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், ஒரு குடும்பத்தின் அதிகாரப் பேராசையால் 45ஆண்டுகளுக்கு முன் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டதாகவும், ஒரே இரவில் நாடே சிறைச்சாலை ஆக்கப்பட்டதாகவும், பத்திரிகைகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் முடக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏழைகள், அடித்தட்டு மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். நெருக்கடி நிலைக் கால மனநிலையிலே இன்னும் இருப்பது ஏன் எனக் காங்கிரஸ் தன்னைத் தானே கேள்வி கேட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.