வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த பிப்ரவரியில் சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், பட்டியல் இனத்தவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக, ஆர்.எஸ். பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சென்னை அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி, மத்திய குற்றப் பிரிவு போலீசார், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
ஆர்.எஸ்.பாரதி தனது பேச்சை மறுத்தால் அதை நிரூபிக்க அவரது குரல் மாதிரியை எடுக்க வேண்டும், இதற்காக காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளதால் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என காவல்துறை தரப்பு வாதிட்டது.
விசாரணை நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே ஜாமீன் வழங்கியதால், காவல்துறையின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சதீஷ்குமார், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய மறுத்துவிட்டார்.