கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் போன்றவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசை பாராட்டி வருவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராஜேந்திர பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், டெண்டர் விடுவதற்கு முன்பே முறைகேடு என்று வழக்கு தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் திமுக பின்வாங்கியதை சுட்டிக்காட்டியுள்ளார். அதே பாணியில் கொள்முதல் செய்துமுடிக்காத மருந்துகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி திமுக அவதூறு பரப்பி வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பரவி வருவதால் பரிசோதனை கிட்டுகள், மருத்துவர்கள், செவிலியர்கள் அணியும் பிபிஇ கிட்டுகள் போன்றவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளதை ராஜேந்திர பாலாஜி சுட்டிக்காட்டியுள்ளார். தேவை அதிகரித்துள்ளதால் அவற்றின் விலை உயரும் என்பதை அறிந்தும் அறியாதவர்கள் போல திமுகவினர் அறிக்கை விடுவதாக அவர் கூறியுள்ளார்.
கொரோனாவில் இருந்து தமிழக மக்களை தற்காப்பதற்கு முதலமைச்சர் அயராது பாடுபடுவதாகவும், தமிழக அரசுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், உலக சுகாதார நிறுவனம் போன்றவை இந்த விவகாரத்தில் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
உண்மை இப்படி இருக்க கொரோனா விவகாரத்தில் திமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கைகள் வெளியிடுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கொரோனா எப்போது கட்டுப்படுத்தப்படும் என்று இறைவனுக்கே தெரியும் என முதலமைச்சர் கூறியது எதார்த்தமானது என்றும் தெய்வ பக்தி உள்ள முதலமைச்சர் எதார்த்தமாக அவ்வாறு கூறியதில் என்ன தவறு இருக்கிறது என்றும் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.