இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் ஆன்லைன் சூதாட்ட தளங்களை தடை செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து முடங்கியுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்ட தளங்கள் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து படையெடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சேமித்து வைத்த தொகையை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து, அதிலிருந்து மீண்டுவர முடியாமல் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்கள் ஏராளமானோர் எனக் கூறியுள்ள ராமதாஸ், இளைஞர்கள் மீது பொருளாதார தாக்குதல்கள் நடத்தி வரும் இது போன்ற ஆன்லைன் சூதாட்ட தளங்களை உடனடியாக கட்டுப்படுத்தப்படாவிடில், அவை மிகப்பெரிய சமூகச் சிக்கலை ஏற்படுத்திவிடும் என அச்சம் தெரிவித்துள்ளார்.
ஆகையால், புதிய விதிகளை உருவாக்கியோ, ஏற்கெனவே உள்ள விதிகளின்படியோ ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.