பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்துமாறு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நோய்த்தொற்றும் ஊரடங்கும் நீடிக்கின்ற பதற்றம் நிறைந்த காலத்தில் அவசரப்பட்டு தேர்வு நடத்த வேண்டாம் என்பதை பெற்றோரும் மாணவர்களும் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், பள்ளிகள் திறக்கப்பட்டு, இரண்டு அல்லது மூன்று வாரங்கள் வழக்கமான முறையில் வகுப்புகள் நடைபெற்று, அதற்குப்பின் பொதுத்தேர்வு நடத்துவதே மாணவர்களின் மன - உடல்நலனுக்கு உகந்தது என கல்வியாளர்கள் பலரும் வலியுறுத்தி வருவதாக மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கமோ மாணவர்களுக்கு ‘ஆன்லைன்’ வகுப்பு, வெளியூர் சென்ற மாணவர்கள் திரும்பி வர ‘இ-பாஸ்’ என நெருக்கடியை உருவாக்கி, பெற்றோரையும் மாணவரையும் அச்சுறுத்துகிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.