சென்னை கோயம்பேட்டில் தொற்று ஏற்படுவதற்கு முன்னரே, மாற்று இடங்களுக்கு செல்லும் யோசனைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கொரோனா பரவலுக்கு காரணம் என கோயம்பேடு வணிகர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பழி போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கூறியிருந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், யார் மீதும் பழிபோட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும், தொற்று பரவலுக்கு வியாபாரிகளோ பொதுமக்களோ காரணம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
கோயம்பேட்டில் தொற்று ஏற்படுவதற்கு முன்னரே, ஏப்ரல் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட கூட்டத்தில், மாற்று இடங்களுக்கு செல்லும் யோசனையை வியாபாரிகள் ஏற்கவில்லை என்றார். வியாபாரிகளுடன் ஏழு, எட்டு முறை பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி, அனைத்து தரப்பினரின் நலன்களுக்கு ஏற்ப, திருமழிசைக்கு மாற்றும் முடிவை அரசு எடுத்தாகவும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளுக்கு 5 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறி தேவை உள்ள நிலையில், எடுத்தேன் கவிழ்த்தேன் என அரசு முடிவெடுத்திருந்தால் அது அனைத்து தரப்பினரையும் பாதித்திருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அரசு இயந்திரத்தை திறம்பட செயல்பட வைக்கும் அதிகாரிகளை குழப்பி, ஆட்டம் காண வைக்கும் சதி செயலில் திமுக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.