தானும் வீட்டில் கோழி வளர்ப்பதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோழியில் நல்ல கோழி கெட்ட கோழி இல்லை, மனிதர்களில் தான் அந்த வேறுபாடு எனக் கூறியுள்ளார்.
கால்நடைத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ உதயசூரியன், கோழி வளர்ப்பு திட்டத்தில் வழங்கப்படும் கோழிகள் தரமானதாக இல்லை, குஞ்சு பொறிப்பது இல்லை என்றார்.
அப்போது பேசிய முதலமைச்சர், சென்னையில் தனது வீட்டில் 2 கோழி வளர்ப்பதாகவும் அவை இரண்டும் தலா 14 முட்டை போட்டு, அடை வைத்ததில் 28 கோழிக் குஞ்சுகள் தன் வீட்டில் உள்ளது என்றார். அப்போது உதயசூரியன் எழுந்து, அது நல்ல கோழியாக இருக்கும் என்றார்.
அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் கோழியில் ஏது நல்ல கோழி, கெட்ட கோழி., எல்லாம் கோழிகளும் நல்ல கோழிகள்தான், மனிதர்களில் தான் வேறுபாடு உள்ளது என்றார். முதலமைச்சரின் இந்த பதிலால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.