மாநிலங்களவை தேர்தலில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு வரும் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதிமுக சார்பில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்பாளர்கள் முன்னிலையில், பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சீனிவாசன், வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தார்.
10 எம்எல்ஏக்கள் முன்மொழியாததால், சுயேட்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
வரும் 18-ம் தேதி மாலை 3 மணிக்குள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ள அவகாசம் உள்ளது. அதன் பிறகு, வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.