கச்சா எண்ணெயின் விலை சரிந்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு தலா 20 ரூபாய் வீதம் குறைக்க மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் முன்வரவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்தபோதும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தற்போதைய கணக்கின்படி, சுமார் 54 ரூபாய்க்கு விற்கப்படவேண்டிய ஒரு லிட்டர் பெட்ரோல், சுமார் 73 ரூபாய்க்கு விற்கப்படுவது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ள அவர், டீசல் விற்பனை விலை இயல்பைவிட 50 சதவிகிதம் கூடுதலாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றியமைக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.