2021 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க, திமுக- அதிமுக அல்லாத ரஜினி போன்ற ஒத்த கருத்துடையவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்னோட்டமாக ரஜினி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை கமல்ஹாசன் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினி...! கமல்....! அபூர்வ ராகங்களில் தொடங்கியது இந்த பந்தம்..!
அடுத்தடுத்த படங்களில் கமல் நாயகனாகவும் ரஜினி வில்லனாகவும் நடித்தாலும், ரஜினியும் கமலும் தனித்தனி வெற்றி நாயகர்களாக கோலோச்சியது மட்டுமல்ல, எம்.ஜி.ஆர், சிவாஜி என்கிற இரு இமயங்களின் சிம்மாசனத்தை, ரஜினி - கமல் என்று 40 ஆண்டுகளாக தக்கவைத்ததும் ஒரு தலைமுறை சாதனைதான்..!
ரஜினி, மக்கள் மன்றத்துடனும், கமல், மக்கள் நீதி மய்யத்துடனும் 2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள ஆயுத்தமாகி வருவதும் இதே பாணியில் தான்...!
அதிமுக- திமுக இருக்கும் நிலையில் முதல் இடத்தை எப்படி நீங்கள் அடைய முடியும் ? என்ற கேள்விக்கு தமிழகத்தை புனரமைக்க இருவரும் அரசியலில் ஆயத்தமாகி வருவதாக நம்பிக்கை தெரிவிக்கிறார் கமல்ஹாசன்..!
திமுக, அதிமுக மற்றும் ஊழல் இல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்த கமல்ஹாசன், ரஜினி போன்ற ஒத்த கருத்துடையவர்களுடனும் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தெரிவித்தார்
ரஜினியும் கமலும் இணைந்தால் யார் முதல்வர் வேட்பாளர்?, யார் தலைமையில் கூட்டணி? என்றெல்லாம் கேள்வி எழுப்ப, முதல்வர் யாராக இருந்தாலும் தமிழக மக்களின் நலன்தான் முதலாக இருக்கும், கூட்டணி அமைவதை பொருத்து யார் தலைமை என்று அப்போது முடிவெடுக்கப்படும் என்கிறார் கமல்ஹாசன்
ரஜினியும் கமலும் அரசியலில் இணைவது சாத்தியமே இல்லை என்று சத்தியம் செய்பவர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சியாகவும், ரஜினி,கமல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவும் ஒன்று நடக்க இருக்கின்றது. ரஜினியின் அடுத்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றது. அதற்காக கதை கேட்டு வருவதாக தெரிவித்துள்ள கமல்ஹாசன், ரஜினியுடன் அரசியல் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளதை சொல்லாமல் சொல்லிவிட்டார்..!