காவிரி டெல்டா மாவட்டங்கள், "பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக" மாற்றப்படும் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு, விவசாயத்தை சீரழிக்கும் புதிய திட்டங்களை வரவிடாமல் செய்யும் கேடயமாக பயன்படுத்தலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மறைந்த இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா பெயரில் சென்னை ஆழ்வார் திருநகரில் அமைக்கப்பட்டுள்ள நூலக திறப்பு விழாவில் பங்கேற்ற சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை வலியுறுத்தாமல், மாநில அரசு மீது பாய்வது சரியா? என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையே, அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தன் மீது குற்றச்சாட்டு வைத்த நடிகை விஜயலட்சுமியின் பெயரை குறிப்பிடாமல் பதிலளித்த சீமான், தன்னை எதிர்த்து ஏதாவது பேச வேண்டும் என அவர் நினைப்பதாக கூறினார். தமக்கு எல்லோரும் எதிரி அல்ல என்றும், தாம் யாரை எதிரியாக நினைக்கிறேனோ அவர்கள் தான், தமது எதிரி என்றும் சீமான் தெரிவித்தார்.