சேலம் மாவட்டத்தில் சர்வதேச தரத்திலான புதிய கிரிக்கெட் மைதானத்தை முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சேலம் மாவட்டம் வாழைப்படியில் உள்ள கருவேப்பிலை பட்டியில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் மற்றும் கிரிக்கெட் பவுண்டேசன் ஒத்துழைப்புடன் மைதானம் உருவாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட், முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே முழுவதும் இயற்கையான சூழலில் பசுமையான வயல்வெளிகளின் நடுவில் அழகாக அமைந்துள்ளது.
சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரத்திலான ஐந்து பிட்சுகளையும் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பேசுகையில் "வரும் காலங்களில் இந்தியாவின் கிராமங்கள் சிறிய நகரங்களிலிருந்து தான் அடுத்த தலைமுறை வீரர்கள் உருவாகப்போகிறார்கள் எனவும் மிகவும் அழகாக அமைந்துள்ள இந்த மைதானத்தில் விளையாட முடியாதது தனக்கு வருத்தமளிப்பதாகவும்" கூறினார்.
அவரை தொடர்ந்து பேசிய பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் பேசுகையில் "ஐபிஎல் போட்டிகள் இந்த மைதானத்தில் நடக்கும் எனவும் தோனி அதில் விளையாடுவார்" என்றும் குறிப்பிட்டு பேசினார்.
உலகதரத்திலான மைதானம் அமைந்ததும், அதில் நடக்க போகும் ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடும் தகவல் சேலம் மாவட்ட கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.