நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள, சுழற்பந்து வீச்சாளர் சாஹல் பேசிய வீடியோ ஒன்றால் தோனி ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னாள் இந்திய கேப்டன் தோனி, கடந்த ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிக்கு பின்னர் எந்த சர்வதேச போட்டியிலும் பங்கேற்கவில்லை. அதே நேரம் இன்னும் ஓய்வு முடிவு குறித்தும் அறிவிக்கவில்லை. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதனிடையே நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணியினர் பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது சுழற்பந்து வீச்சாளர் சாஹல் எல்லா வீரர்களிடமும் சென்று, விளையாட்டாக பேட்டி எடுத்து கொண்டிருந்தார். சாஹல் டிவி-க்காக பேட்டி கொடுங்கள் என்று ஒவ்வொரு வீரரிடமும் சென்று, நவீன சிறிய ரக ரெக்கார்டரை கொண்டு கலகலப்பாக பேசி சில தகவல்களை பெற்றார்.
அப்படியே பேருந்தின் கடைசி வரிசையில் ஜன்னல் இருக்கைக்கு சென்ற சாஹல், இந்த சீட்டில் நாங்கள் யாரும் அமர மாட்டோம். ஏனென்றால் தோனி வழக்கமாக இந்த சீட்டில் தான் அமருவார்.
இது அவருக்கான இடம். எனவே இந்த சீட்டை நாங்கள் யாரும் ஆக்கிரமிக்க மாட்டோம். நாங்கள் தோனியை மிகவும் மிஸ் செய்கிறோம் என கூறியுள்ளார். சாஹலின் இந்த வீடியோ கிரிக்கெட் குறிப்பாக தோனி ரசிகர்களிடையே மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.