தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் பற்றிய நிலைப்பாடு தெரியாமல் ரசிகர்கள் குழம்பி நிற்கும் வேளையில், லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாட தோனிக்கு மாற்று வீரரை இறுதியாக கண்டுபிடித்து விட்டது இந்திய அணி என கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர்.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி வெற்றியை இந்திய அணி வசமாக்கும் முன்னாள் கேப்டன் தோனிக்கு சரியான மாற்று வீரரை கண்டறியாமல் உள்ளதாக இந்திய அணி மீது விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை அபாரமாக விளையாடி கைப்பற்றியது இந்திய அணி.
இது தொடர்பாக தனது யூ டியூப் சேனலில் பேசியுள்ள அக்தர், முதல் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு அடுத்த இரு போட்டிகளில் அபாரமாக வென்று தொடரை கைப்பற்றுவது எளிதான விஷயம் அல்ல என பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த தொடரின் மூலம் தோனிக்கு மாற்று வீரரை இறுதியாக இந்திய அணி கண்டறிந்துள்ளது என்றே நான் நினைக்கிறேன். அது வேறு யாரும் அல்ல Manish Pandey தான் அது. அவர் விளையாடிய கடைசி இரு போட்டிகளில் போதுமான பந்துகளை அவர் எதிர்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
எனினும் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தோனியின் இடத்திற்கு மாற்றாக Manish Pandey இருப்பதை இந்திய அணி உணர்ந்துள்ளது. அதே போல Shreyas Iyer ஒரு முழு வீரராக உருவெடுத்துள்ளார். இந்த வீரர்களால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மேலும் வலுவானதாக மாறும் என கூறியுள்ளார் அக்தர்.
குறிப்பாக மைதானத்தில் பேட்டிங் குறித்து இருவரும் நிறையவே விவாதிக்கின்றனர். மேற்கண்ட இரு வீரர்களும் ஐ.பி.எல்- லில் நிறைய விளையாடியுள்ளனர், அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே முக்கியமான போட்டிகளை சிறப்பாக முடிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார் அக்தர்.