இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் தாதா என்று வர்ணிக்கப்படும் கங்குலிக்கும், தல என்று செல்லமாக அழைக்கப்படும் தோனிக்கும் இடையேயான பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியதால், இந்திய அணியின் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து தோனி நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டி ஒன்றில் வெற்றி பெற்றதும், பிளிண்டாப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சட்டையை சுற்றி, தன்னை கிரிக்கெட் உலகின் தாதாவாக காட்டிக் கொண்டவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி..!
கடந்த 2004 ஆண்டின் இறுதியில் இந்திய அணிக்குள் சவுரவ் கங்குலியால் விக்கெட் கீப்பராக கொண்டு வரப்பட்டவர் தோனி..! ஆனால் அதே தோனியின் வேகமான வளர்ச்சி, தொடர்ந்து ஆட்டங்களில் சோபிக்காமல் ஒற்றை இலக்க ரன்களுடன் பெவிலியனுக்கு திரும்பிய கங்குலியை 2007 ஆம் ஆண்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தது.
சவுரவ் கங்குலிக்கு பின்னர் டிராவிட்டை தொடர்ந்து கேப்டன் பொறுப்பிற்கு முன்னேறிய தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ஒவ்வொன்றும் அவரது வளர்ச்சிக்கு மேலும் உரமிட்டது. முதலில் 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற தோனி, அடுத்து 2011ல் 50 ஓவர் உலககோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என்று மொத்தம் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே இந்திய கேப்டன் தோனி மட்டுமே..!
இத்தனை சாதனைகளை நிகழ்த்தியபோது, தோனி மீது கங்குலிக்கு பழைய கசப்புணர்வு இருந்து கொண்டே இருந்தது. 2017 ஆண்டு ஒரு பேட்டியில் தோனி 20/20 போட்டிக்கு சிறந்த வீரர்தானா? என கேள்வி எழுப்பி சர்ச்சையை கிளப்பினார்.
தோனிக்கு, கங்குலி மட்டுமல்ல அவருடன் சம காலத்தில் அணியில் இருந்த சேவாக், தற்போது பா.ஜ.க. எம்.பி.யாக உள்ள கவுதம் காம்பீர், யுவராஜ் சிங், ஆகியோரும் கருத்துவேறுபாடு கொண்டிருந்தனர். அவர்களின் கட்டாய ஓய்வுக்கு தோனிதான் காரணம் என்று குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் தன்னுடைய பழைய கணக்கை தீர்த்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது போல இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவி கங்குலியைத் தேடி வந்தது.
கடந்த ஆண்டு ஜூலையில் உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரன் அவுட் ஆகி வெளியேறிய தோனி கண்கலங்கிய நிலையில் பெவிலியன் திரும்பினார்.
அதன் பின்னர் ஒருநாள் மற்றும் 20 20 போட்டிகளில் பங்கேற்காமல் தவிர்க்கத் தொடங்கினார் தோனி. விராட்கோலி கேப்டனாக கோலோச்சியதால் தோனிக்கு அணியில் வேலை இல்லாமல் போனதாக சொல்லப்பட்டது.
அண்மையில் ஐபிஎல் 20 ஓவர் கோப்பைக்கான தனது கனவு அணியில், தன்னை தானே கேப்டனாக அறிவித்துக் கொண்டதோடு, அணியில் வீரராக கூட தோனியை குறிப்பிடவில்லை.
இதனை பொருட்படுத்தாமல் 2020 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தோனி தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்திய அணியின் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் ஏ கிரேடில் இருந்த தோனியை ஒரே இரவில் வீட்டுக்கு அனுப்பி தன்னுடைய 13 ஆண்டு பகையை சாதுர்யமாக கங்குலி தீர்த்துக் கொண்டதாக கிரிக்கெட் ரசிகர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
தோனியின் கிரிக்கெட் சாதனைகளை பாராட்டும் விதமாக அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் உரிய மதிப்பளித்து பிரியாவிடை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவரது ரசிகர்கள், தல இருக்கிறவன் எல்லாம் தலைவனாகி விட முடியாது தலைமை பண்பு இருப்பவர்களே தரமான தலைவனாக முடியும் என்று முட்டியை உயர்த்தினாலும், தற்போது வரை தாதா கங்குலி எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
அதே நேரத்தில் தோனி தற்போது ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்கு, சென்னை அணிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.