விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐசிசி பெண்கள் டி 20 உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் அறிமுக வீராங்கனையாக களமிறங்குகிறார் 16 வயதான ரிச்சா கோஷ்.
இவரது வயதில் உள்ள பெண்கள் பலரும் பள்ளி பொதுத்தேர்வுக்காக தயாராகி வரும் நிலையில், உலககோப்பைக்கான அணியில் இடம்பெற்று அசத்தியுள்ளார் ரிச்சா கோஷ். இவர் பெங்கால் அணியின் நட்சத்திர பிளேயராக திகழ்பவர். சமீபத்தில் கட்டாக்கில் நடைபெற்ற இந்திய "சி" அணிக்கு எதிரான போட்டியில், இந்திய "பி" அணிக்காக விளையாடிய ரிச்சா கோஷ் 26 பந்துகளில் 36 ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
இந்நிலையில் தற்போது பெண்கள் டி 20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றுள்ளார். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரிச்சா கோஷ், உலகக்கோப்பைக்கான அணியில் நான் இடம்பெற வேண்டும் என்ற கனவு, இவ்வளவு வேகமாக நிறைவேறும் என்று எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு எப்போதுமே ரோல் மாடல் எனது தந்தை தான். ஏனென்றால் அவரிடம் இருந்தது தான் நான் கிரிக்கெட்டை கற்று கொண்டேன். தந்தைக்கு பிறகு எனக்கு முன் மாதிரியாக இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். அது போல சிக்ஸர் விளாசுவதில் நான் ரோல் மாடலாக கருதுவது தோனியை என்று கூறியுள்ளார் ரிச்சா கோஷ். அவர் சிக்ஸர் அடிக்கும் விதம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது.
யார் பந்து வீசினாலும் உங்களிடம் பேட் உள்ளது என்றால், நீங்கள் எதையும் செய்ய முடியும் என்றார். ரிச்சா கோஷ் குறித்து கூறிய அவரது தந்தை, அவளை சுற்றி இருந்த அனைவரும் பொழுதுபோக்கிற்காக கிரிக்கெட் ஆடிய போது, இவள் மட்டும் பேட்டை வைத்து கொண்டு மிக தீவிரமாக கிரிக்கெட்டின் அடித்தளத்தை பயின்று கொண்டிருந்தாள் என்றார்.
ரிச்சா கோஷ் சிறந்த ஆல்ரவுண்டராகவும் உள்ளார். சிக்சர் மூலம் விரைவாக ரன்களை குவிப்பதில் வல்லவரான இவர், சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளையும் வீழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.