இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்தியா, தொடரையும் கைப்பற்றியது.
புனேவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ராகுல், ஷிகர் தவான் ரன்களைக் குவித்தனர்.
ராகுல் 54 ரன்களும், ஷிகர் தவான் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் கோலி 26 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. மணீஷ் பாண்டே 31 ரன்களும், ஷர்துல் தாகூர் 22 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறினர். தனஞ்செய டி சில்வா அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்தார். 15.5 ஓவர்களில் அந்த அணி 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சைனி 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர், சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தனர்.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.