டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மாற்றம் செய்ய தேவை இல்லை, அதை அப்படியே தனியாக விட்டுவிடுங்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இயான் போத்தம் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து வெற்றி பெற்றதற்கு பின்னர் மேற்கண்ட கருத்தை இயன் போத்தம் வலியுறுத்தியுள்ளார். 1877 முதல் கடந்த 143 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை 5 நாட்கள் நடத்தும் நடைமுறை உள்ளது.
இதை மாற்றி 4 நாட்கள் மட்டுமே டெஸ்ட் போட்டி நடத்த ஐசிசி திட்டமிட்டு வருகிறது. இதற்கு பல முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் சேர்ந்துள்ள இயன் போத்தம்,கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் 189 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றதை வாழ்த்தி ட்விட் செய்துள்ளார்.
அதில் சிறப்பாக ஆடியுள்ளீர்கள். டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணமாக இருந்தது இந்த போட்டி. அரங்கம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பியிருந்ததை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
டெஸ்ட் போட்டிகளில் விளையாட திறமை, உடல் திறன் மற்றும் மனோதிடம் மிக அவசியம். மேற்கண்ட தகுதியை வளர்த்து கொள்ள டெஸ்ட் போட்டிகள் தான் சரியான இடம். அதனால் டெஸ்ட் போட்டிகளில் எந்த மாற்றமும் வேண்டாம். அதை அப்படியே தனியாக விட்டு விடுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.