பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 19 நாள்களாக நடைபெற்று வந்த உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தன.
ஸ்டேடு டி பிரான்ஸ் மைதானத்தில் பல்வேறு வண்ணமயமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டியில் கலந்துகொண்ட அணிகளின் கண்கவர் அணிவகுப்பும் நடைபெற்றது. அணிவகுப்பு நிறைவில், பெண்கள் மாரத்தானில் வெற்றிபெற்றவர்களுக்குப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்திய அணியில், துப்பாக்கிச் சுடுதலில் இரு வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கெர், வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியா ஆண்கள் ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் இருவரும் இந்தியக் கொடியை ஏந்திச் சென்றனர்.
சம்பிரதாய முறைப்படி ஒலிம்பிக் கொடியை, பாரீஸ் நகர மேயர் ஆனி ஹிடால்கோ, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக்கிடம் தர, அவர் அதை லாஸ் ஏஞ்சலீஸ் நகர மேயர் கரென் பாஸிடம் ஒப்படைத்தார். அடுத்த ஒலிம்பிக் போட்டிகள், 2028-ஆம் ஆண்டு, ஜூலை 14 முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை லாஸ் ஏஞ்சலீஸில் மூன்றாவது முறையாக நடைபெற உள்ளன.
நடைபெற்று முடிந்த பாரீஸ் ஒலிம்பிக்கில், அமெரிக்கா அணி 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தம் 126 பதக்கங்கள் வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. 40 தங்கம் உள்பட 91 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடம் பெற்றது. போட்டியை நடத்திய பிரான்ஸ் 16 தங்கம் உள்பட 64 பதக்கங்களுடன் 5-ஆவது இடத்தைப் பெற்றது.
இந்திய அணி, ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் 71-வது இடத்தைப் பிடித்தது. துப்பாக்கிச் சுடுதல், மல்யுத்தம், ஈட்டி எறிதல், ஹாக்கி ஆகிய விளையாட்டுகளில் இந்தியா பதக்கம் வென்றது