சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா இரண்டாவது முறையாக வென்றது. பார்படோஸின் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
முதலில் விளையாடிய இந்தியா 176 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ஆட்டநாயகனாக விராத் கோலியும், தொடர்நாயகனாக பும்ராவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த வெற்றியின் மூலம், 2007-ஆம் ஆண்டுக்குப் பிறகு இருபது ஓவர் கிரிக்கெட்டில் இரண்டாவது முறையாக இந்தியா உலகக் கோப்பையை வென்றது.
அத்துடன், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு அடுத்து இரண்டாவது முறையாக இருபது ஓவர் உலகக் கோப்பையை இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது. இந்த உலகக் கோப்பையுடன், 50 ஓவர் ஒருநாள் போட்டிகளில் இரண்டு, இருபது ஓவர் கிரிக்கெட்டில் இரண்டு என மொத்தம் 4 உலகக் கோப்பைகளை இந்தியா வென்றுள்ளது.
இந்தியா உலகக் கோப்பையை வென்றதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த உலகக் கோப்பையுடன், சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கேப்டன் ரோஹித் சர்மாவும், நட்சத்திர வீரர் விராத் கோலியும் அறிவித்துள்ளார்.