செஸ் ஒலிம்பியாட் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இந்திய ஓபன் பி அணி, 6வது சுற்றுப் போட்டியில் அர்மேனியாவுடன் வீழ்ந்தது. அதே சமயம் இந்திய பெண்கள் சி மற்றும் பி அணியை வீழ்த்திய ஜார்ஜியாவை இந்திய பெண்கள் ஏ அணி வெற்றி கொண்டது.
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 6-வது சுற்றில் இந்திய ஓபன் A அணி உஸ்பெகிஸ்தானுடன் மோதிய ஆட்டங்கள் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்திய அணியின் ஹரிகிருஷ்ணா வெற்றி பெற விதித், அர்ஜுன் போட்டியை சமன் செய்தனர். சசிகிரண் தோல்வியைத் தழுவினார்.
அர்மேனியா அணியுடன் மோதிய இந்தியாவின் ஓபன் பி அணி 2.5-க்கு 1.5 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் குகேஷ் மட்டும் வெற்றி பெற, சரின் நிஹால், அதிபன் பாஸ்கரன், ரோனக் சத்வானி தோல்வியைத் தழுவினர்.
லிதுவேனியாவுடன் மோதிய இந்திய ஓபன் சி அணி 3.5-க்கு 1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியில், சேதுராமன், அபிஜித் குப்தா, அபிமன்யு புராணிக் ஆகியோர் வெற்றி தேடித்தந்தனர். சூர்யா சேகர் தனது போட்டியை சமன் செய்தார்.
ஜார்ஜியாவுடன் மோதிய இந்திய மகளிர் ஏ அணி 3-க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. கொனேரு ஹம்பி, வைஷாலி வெற்றி பெற்ற நிலையில், ஹரிகா துரோணவள்ளி மற்றும் தானியா சச்தேவ் விளையாடிய போட்டிகள் சமனில் முடிந்தன.
செக்குடியரசு அணியுடன் மோதிய இந்திய மகளிர் பி அணியின் ஆட்டங்கள் 2-க்கு 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தன. இந்திய அணியின் வந்திகா அகர்வால், பத்மினி ரவுட், மேரி அன் கோம்ஸ், திவ்யா தேஷ்முக் போட்டிகளை சமன் செய்தனர்.
ஆஸ்திரேலிய அணியுடன் மோதிய இந்திய மகளிர் சி அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. சாஹிதி வர்ஷினி, விஷ்வா வஷ்ணவாலே ஆகியோர் வெற்றி வாகை சூடினர். தமிழக வீராங்கனை நந்திதா மற்றும் ஈஷா கரவாடே ஆகியோர் விளையாடிய போட்டிகள் சமனில் முடிந்தது.
உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் விளையாடிய நார்வே அணி 2.5-1.5 என்ற புள்ளிக்கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. மேக்னஸ் கார்ல்சன் மட்டும் ஆறுதல் வெற்றி பெற்றார்.