ஒருவர் மீது மத ரீதியில் விமர்சனம் முன்வைப்பது கண்டனத்திற்குரியது என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இந்திய வீரர் முகமது ஷமி மீது சமூக வலைதளங்களில் சிலர் அவதூறாக விமர்சித்திருந்தனர்.
இது குறித்து பேசிய விராட் கோலி, சில முதுகெலும்பு இல்லாதோர் நேரடியாக விமர்சிக்க தைரியமின்றி சமூகவலைதளத்தில் கருத்து பதிவிடுவதாக தெரிவித்துள்ளார்.
ஒருவரை மத ரீதியாக தாக்கிப் பேசுவது மிக மோசமான செயல் என கண்டித்த விராட் கோலி, இந்திய அணிக்கு முகமது ஷமி பலமுறை வெற்றித் தேடித்தந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.
அனைவருக்குமே கருத்து சுதந்திரம் என்பது உள்ளது ஆனால் இவ்வாறு வசைபாடுவதை ஏற்கவே முடியாது என்றும் கோலி பேசியுள்ளார்.