டோக்கியோ ஒலிம்பிப் போட்டி வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என மொத்தம் 113 பதக்கங்களுடன் அமெரிக்கா பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற்றது.
டோக்கியோ தேசிய விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் போட்டிகளில் பங்கேற்ற நாடுகளின் கொடிகளுடன் அந்தந்த நாட்டு வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்தியாவின் சார்பில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசியக் கொடியேந்திக் கலந்துகொண்டார். நிறைவுவிழாவில் நடைபெற்ற ஆட்டம் பாட்டம் சாகச நிகழ்ச்சிகள் கண்ணைக் கவர்ந்தன.
39 தங்கம் பெற்றுப் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பெற்றபோதும், ஐந்தாண்டுகளுக்கு முன் ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கையைவிட இப்போது குறைவாகவே பெற்றுள்ளது. அதை நெருங்கும் வகையில் 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலப் பதக்கங்களுடன் சீனா இரண்டாமிடம் பெற்றது.
27 தங்கம் வென்ற ஜப்பான் மூன்றாமிடத்திலும், 22 தங்கம் வென்ற பிரிட்டன் நான்காமிடத்திலும் உள்ளன. 20 தங்கம் வென்ற ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி ஐந்தாமிடத்திலும், 17 தங்கம் வென்ற ஆஸ்திரேலியா ஆறாமிடத்திலும் உள்ளன. அதே நேரத்தில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்ற இந்தியா 48ஆவது இடம் பெற்றுள்ளது.