ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தத்தில் 65 கிலோ எடைப் பிரிவில், அடுத்தடுத்து இரு போட்டிகளில் அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் பஜ்ரங் புனியா, அரையிறுதியில் தோல்வியடைந்தார்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிர்கிஸ்தான் வீரரையும், காலிறுதியில் ஈரான் வீரர் மொர்ட்டசாவை (Morteza Cheka Ghiasi) வீழ்த்திய அவர், அரையிறுதியில் அஜர்பைஜான் வீரர் ஹாஜி அலியேவிடம் வீழ்ந்தார்.
இருப்பினும் வெண்கலத்திற்கான போட்டியில் பஜ்ரங் புனியா வெற்றிபெற்று பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது. ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சீமா பிஸ்லா, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்தார்.
ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்தியா, பிரிட்டனிடம் 3-க்கு 4 என்ற கோல் கணக்கில் போராடி வீழ்ந்தது. மகளிர் ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில், முதல் முறையாக பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டது.