டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வட்டுதல் எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
3 வாய்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில், முதலில் 60.29மீட்டர் தூரமும், பின்னர் 63.97மீட்டர் தூரமும் வட்டு எறிந்த கமல்பிரீத் கவுர், மூன்றாவது முயற்சியில் 64 மீட்டர் தூரம் எறிந்து இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். 66.42 மீட்டர் தூரம் எறிந்த, அமெரிக்காவை சேர்ந்த வலேரி ஆல்மேன் Valarie Allman, 64 மீட்டர் தூரம் எறிந்த கமல்பிரீத் கவுர் ஆகிய இருவர் மட்டுமே, ஆட்டோமேட்டிக் முறையில் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளனர்.
ஒலிம்பிக் வட்டு எறிதல் போட்டிகளில் இந்தியர்கள் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. பஞ்சாப்பை சேர்ந்த கமல்பிரீத் கவுர், இந்த ஆண்டில் ஏற்கெனவே இரண்டு முறை 65 மீட்டர் தூரத்திற்கு எறிந்துள்ளார். 65 மீட்டர் தூரத்திற்கு அதிகமாக எறிந்த முதல் இந்தியர் கமல்பிரீத் கவுர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றொரு இந்திய வீராங்கனையான சீமா புனியா, அதிகபட்சமாக 60.57 மீட்டர் தூரம் எறிந்து 16ஆவது இடம் பிடித்து வெளியேறினார்.