டோக்கியோ ஒலிம்பிக்கில், 64 முதல் 69 கிலோ எடை பிரிவினருக்கான மகளிர் வால்ட்டர்வெயிட் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆடவர் ஹாக்கியில் ஸ்பெயினை தோற்கடித்த இந்திய அணி, அடுத்த போட்டியை எதிர்கொள்ள தயாராக உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி லீக் போட்டியில் இந்திய அணி, ஸ்பெயினை 3-க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஏ பிரிவில் களமிறங்கி உள்ள இந்திய ஆண்கள் அணி 3-வது லீக் ஆட்டத்தில் ஸ்பெயினை எதிர்கொண்டது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புடன் ஆடிய இந்திய வீரர்கள், ஸ்பெயின் அணிக்கு கடும் போட்டியை அளித்தனர். இந்திய அணியில் ரூபேந்தர் பால் சிங் 2 கோலும், சிம்ரன்ஜித் ஒரு கோலும் அடித்தனர்.
64 முதல் 69 கிலோ எடை பிரிவினருக்கான மகளிர் வால்ட்டர்வெயிட் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹயின் ஜெர்மனியின் நாடின் அபெட்ஸ்-ஐ 16 ஆவது ரவுண்டில் தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறி உள்ளார்.
குரூப்-ஏ பேட்மின்டன் ஆடவர் இரட்டையின் போட்டியில் இந்தியாவின் சிராக் ஷெட்டி, சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி, பிரிட்டனின் பென் லேன்-சீன் வெண்டி ஜோடியை 21 க்கு 17, 21 க்கு 19 என்ற கணக்கில் தோற்கடித்தது.ஆனால் இந்த குரூப்பில் 2 போட்டிகளில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் பின்தங்கியதால், காலிறுதியில் நுழையும் வாய்ப்பை இழந்த இந்தியாவுக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.
10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் போட்டிகளில் இளவேனில்-திவ்யான்ஷ் மற்றும் அஞ்சும்-தீபக் ஜோடிகளும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இணை போட்டியில் மனு பாக்கர்-சவுரப் சவுத்ரி ஜோடியும் தோல்வியடைந்து வெளியேறினர். டேபிள் டென்னிஸ், 3ஆவது சுற்றில் இந்தியாவின் சரத் கமல், சீனாவின் மா லாங்கிடம் தோல்வி அடைந்தார்.