ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வோருக்கு மூன்று கோடி ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வெல்வோருக்கு 2 கோடி ரூபாயும், வெண்கலப் பதக்கம் வெல்வோருக்கு ஒரு கோடி ரூபாயும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில், விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு அரசின் சிறப்பு ஊக்கத்தொகைக்கான காசோலைகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட படி ஒலிம்பிக் போட்டிகளுக்கு விளையாட்டு வீரர், வீராங்கனைகளைத் தகுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டை நான்கு மண்டலங்களாக பிரித்துப் பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
உலக அரங்கில் விளையாடும் தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வோருக்குப் பரிசுத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். பள்ளிக்காலத்தில் தானும் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளதால், விளையாட்டு வீரர்களுக்கான தேவை என்ன என்பதை அறிந்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேயராக இருந்த போது மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து காட்சிப்போட்டிகளில் விளையாடியுள்ளதையும் நினைவுகூர்ந்தார்.
கொரோனா சூழலில் தமிழக அரசு தடுப்பாட்டம் எனும் வியூகத்துடன் செயல்பட்டு வருவதாகவும், கொரோனாவைத் தடுக்கும் தடுப்பாட்ட வியூகம் என்பது தடுப்பூசி தான் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.