பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியின் இறுதி ஓவரில் 36 ரன்கள் குவித்து ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா சமன் செய்துள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 19வது ஐபிஎல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முந்தையை ஆட்டத்தில் அதிரடி காட்டிய தொடக்க ஜோடியான ருத்துராஜூம், டூ பிளெஸ்சிசும் இந்த ஆட்டத்திலும் தங்களின் அதிரடியை தொடர்ந்தனர். முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் குவித்த இந்த ஜோடியை ருத்துராஜ் விக்கெட்டை கைப்பற்றி பிரித்தார் சுழற்பந்து வீச்சாளர் சஹால்.
அதனைத் தொடர்ந்து வந்த ரெய்னா 3 சிக்ஸர்களுடன் 24 ரன்கள் குவித்து ’ப்ளு கேப்’ பவுலர் ஹர்சல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரெய்னாவைத் தொடர்ந்து ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டி அரைசதம் அடித்த டு பிளஸ்சிசும் அதே ஒவரிலேயே அவுட்டாகி வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கினார் ஆல்ரவுண்டர் ஜடேஜா. ஆரம்பத்தில் ராயுடுவுடன் சேர்ந்து பொறுமைக்காட்ட, சென்னை அணி 160 ரன்கள் தொடுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கிடையில் ராயுடுவும் அவுட்டாக, கேப்டன் தோனியும் களமிறங்கினார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஹர்ஷல் பட்டேல் வீசிய கடைசி ஓவரில் களேபரம் செய்தார் ஜடேஜா. அந்த ஓவரில் 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என வான்கடேவில் வான வேடிக்கை காட்டிய ஜடேஜா 36 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஐபிஎல் போட்டியின் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த யுனிவர்சல் பாஸ் கெயிலின் சாதனையை சமன் செய்தார் அதிரடி மன்னன் ஜடேஜா. மேலும் இந்த சாதனையுடன் 160 ரன்கள் எடுக்குமா என்ற நிலையில் இருந்த சென்னை அணியும் 20 ஒவர்களில் 191 ரன்கள் குவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன்மூலம் அபாரமாக ஆடிய சென்னை அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது