டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இறுதி கட்ட ஓவர்களில் இடியென இறங்கி சிக்ஸர் மழை பொழிந்த மோரிஸின் அதிரடியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் 14வது தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 7வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இருவரும் தங்களது அணிகளுக்கு புதிய இளம் கேப்டன்கள் என்பதால் யார் அணியை வெற்றி பெற வைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருந்தது.
இந்த நிலையில் டாஸை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கினர். சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிய இருவரும் இந்த போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அவர்களை தொடர்ந்து வந்தவர்களும் பெவிலியனுக்கு திரும்புவதிலேயே ஆர்வமாய் இருக்க, 7 ஓவர்களில் 37 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்து தவித்தது டெல்லி அணி. அடுத்த வந்த அந்த அணியின் கேப்டன் பண்ட் மட்டும் அதிரடியாக ஆடி 50 ரன்களை எடுத்தார். ஆனால் அதனை எடுத்த வேகத்திலேயே அவரும் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் குவித்தது டெல்லி அணி.
இதனைதொடர்ந்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. பென்ஸ்டோக்ஸ் இல்லாத குறையை தீர்த்து வைப்பாரா என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க 2 ரன்களுடன் நடையைக் கட்டினார் ஜோஸ்பட்லர். அவரைத் தொடர்ந்து கடந்த ஆட்டத்தில் சதம் அடித்த கேப்டன் சஞ்சுசாம்சன் உள்பட பலரும் மைதானத்தை பார்வையிட்டு சென்றதால் 10 ஓவரில் 5 விக்கெட் இழந்து டெல்லி அணிக்கு ஃடப் கொடுத்தது ராஜஸ்தான் அணி. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மில்லரும், திவேட்டியாவும் அணியின் வீழ்ச்சியை கட்டுபடுத்த தடுப்பாட்டத்தில் ஈடுபட அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது.
ஆனால் முக்கியமான இறுதிக் கட்டத்தில் மீண்டும் டெல்லி பக்கம் காற்றடிக்க, ராஜஸ்தான் கூடாரம் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டுகளால் சரிய தொடங்கியது. அப்போது சரியும் அணியை சரித்திரம் படைக்க வைப்பேன் என்று களத்திற்குள் புயலாய் வந்தார் இந்த சீசனில் அதிக கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட கிறிஸ்மோரிஸ். முதலில் புலி பாய்வதற்கு பதுங்குவதான் என்பதற்கு ஏற்ப பொறுமையாக ஆடிய மோரிஸ், இறுதி இரண்டு ஓவர்களில் புலியாய் மாறி இடியாய் அடிக்க நாலாபுறமும் பறந்த நான்கு சிக்ஸர்களால் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை தோற்கடித்தது. இதன்மூலம் இந்த ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.